சென்னையைக் கடைசியாக அரசாண்ட ஆர்க்காடு நவாபுகளின் அரண்மனை இது, நம் கண் முன்னே அழிந்து வருகிறது.


  • சேப்பாக்கம் அரண்மனை
    சேப்பாக்கம் அரண்மனை
  • செனட் இல்லம்
    செனட் இல்லம்
  • விக்டோரியா பப்ளிக் ஹால்
    விக்டோரியா பப்ளிக் ஹால்
  • எழும்பூர் ரயில் நிலையத்தின் வேப்பேரி பகுதி வாசல்
    எழும்பூர் ரயில் நிலையத்தின் வேப்பேரி பகுதி வாசல்

சென்னை என்றவுடன் நம் மனதில் தோன்றும் சித்திரம், பழமையின் அடை யாளங்களாக எழுந்து நிற்கும் பிரம்மாண்ட சிவப்பு நிறக் கட்டிடங்கள்தான். பெரும்பாலும் இந்தோ சாரசெனிக் பாணியில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்களில் ஒரு சில மட்டுமே இன்றைக்கு எஞ்சியுள்ளன.

இவற்றுக்கு முந்தைய வரலாற்று எச்சங்களான அரண்மனைகளும் மற்ற கட்டிடங்களும் அநேகமாக அழிந்துவிட்ட நிலையில், வெள்ளைக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களிலும் சிலவே எஞ்சியுள்ளன. முறையான பராமரிப்பில்லாததால், இவையும் அழிவை எதிர்நோக்கி உள்ளன. கட்டிடக் கலையில் விஞ்சி நிற்கும், சென்னையின் அப்படிப்பட்ட கட்டிடங்களில் சில:

சேப்பாக்கம் அரண்மனை

சென்னையைக் கடைசியாக அரசாண்ட ஆர்க்காடு நவாபுகளின் அரண்மனை இது, நம் கண் முன்னே அழிந்து வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததே காரணம்.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு பக்கவாட்டில் இருக்கும் சேப்பாக்கம் அரண்மனை என்றழைக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தை 1768-ல் கட்டியவர் பால் பென்ஃபீல்ட். 1870களில் ராபர்ட் சிஷ்ஹோம் விரிவுபடுத்தினார். காத்திக், இந்தோ சாரசெனிக் கட்டிடக் கலை பாணிகளின் கலவையாகக் கட்டப்பட்டது. வெள்ளைக்காரர்களின் கைகளுக்கு வந்த பிறகு வருவாய்த் துறை அலுவலகமாகச் செயல்பட்டது.

ஹுமாயுன் மகால், கால்சா மகால் என்று இரு வளாகங்கள் உண்டு. இங்கே படத்தில் இருப்பது கால்சா மகால். அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்துகளால் இதன் பெரும்பகுதி சமீபத்தில் இடிந்துவிட்டது.

செனட் இல்லம்

புகழ்பெற்ற இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவரும் ராபர்ட் சிஷ்ஹோம்தான். ரோமானியக் கட்டிடக் கலையுடன் இந்தோ சாரசெனிக் பாணி கலந்து 1864-ல் கட்டப்பட்டது. அழகு மிளிரும் இந்தக் கட்டிடம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150-வது

ஆண்டு விழாவை முன்னிட்டு INTACH அமைப்பின் முயற்சியால் புனரமைக்கப்பட்டது. இன்றைக்கும் சென்னையின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரம்மாண்ட அரங்காக இருக்கிறது.

விக்டோரியா பப்ளிக் ஹால்

ஊர்தோறும் பொதுக் கூட்டம் நடத்தும் டவுன் ஹால்கள், அந்தக் காலத்தில் உண்டில்லையா? அப்படி, உருவாக்கப்பட்டதுதான் இந்த அரங்கம். இங்கே சினிமாவும் காட்டப்பட்டிருக்கிறது. விக்டோரியா மகாராணியின் பொன்விழாவை ஒட்டி 1887-ல் ரிப்பன் மாளிகை அருகே இதை வடிவமைத்தவர் ராபர்ட் சிஷ்ஹோம், கட்டியவர் நம்பெருமாள். ரோமனிய (ஆங்கிலேயே) கட்டிடக் கலை பாணியில் அமைந்தது. முறையான பராமரிப்பு இல்லாததால் நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து, சமீபத்திய ஆண்டுகளில் புனரமைக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை பயன்பாட்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

எழும்பூர் ரயில் நிலையம்

வழக்கமாக எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பகுதியே நம் கண்களுக்குப் பழகியிருக்கிறது. அதன் மறுபுற வாசலும் அழகானதுதான். 1908-ல் இதை வடிவமைத்தவர் ஹென்றி இர்வின், கட்டியவர் சாமிநாதன்.

திராவிடக் கட்டிடக் கலையின் கூறுகளுடன், இந்தோ சாரசெனிக் பாணியில் கட்டப்பட்டது. காலத்தில் பிந்தையதாக இருந்தாலும் நூறாண்டுகளைத் தாண்டி நல்ல பராமரிப்புடன், ஆயிரக்கணக்கான பயணிகள் தினசரி பயன்படுத்தும் இடமாகத் திகழ்ந்து வருகிறது.

பின்னூட்டமொன்றை இடுக