இல்லம் வாங்க… இணையம் வாங்க…

இணையம் இல்லை என்றால் இன்று எல்லாமே ஸ்தம்பித்துப் போய்விடும் அளவுக்கு இணையம் அத்தியாவசியமாகிவிட்டது. மேலும் பெரும்பாலும் பரிவர்த்தனைகள், ஆலோசனைகள் எல்லாவற்றுக்கும் இன்றைய வாழ்க்கை இணையத்தையே சார்ந்திருக்கிறது. வேலை தேட, ஆடை வாங்க, பழைய பொருட்களை விற்க, புதிய விஷயங்களைக் கற்க என எல்லாவற்றுக்கும் இணையத்தையே நம்புகிறோம். இந்த நம்பிக்கையை கூகுளின் புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. கூகுள் இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில், நாட்டில் நடக்கும் மொத்த ரியல் எஸ்டேட் தொழில் 50 சதவிகிதம் இணையத் தேடுதல் மூலம்தான் நடைபெறுகிறது எனத் தெரியவந்துள்ளது. வீடு, வீட்டு மனை வாங்குவதற்கு அச்சு ஊடகம், வீட்டுத் தரகு ஆகியவற்றைவிட இணையததையே பெரும்பாலானவர்கள் நம்புவதாகவும் அறிக்கை முடிவுகள் கூறுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் இணையம் மூலம் வீடுகளைத் தேடுபவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் கூகுள் கூறுகிறது. மேலும் 4.3 கோடி மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ரியல் எஸ்டேட் தொழில் நடைபெற இணையத் தேடல் ஒரு காரணமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை. யாகூ ஹோம்ஸ், ரெண்ட்.காம், மேஜிக் பிரிக்ஸ், 99ஏக்கர், ஆகிய தளங்கள் இணையத் தேடலில் முக்கியப் பங்கு வகிப்பதாக கூகுள் ஆய்வு தெரிவிக்கிறது.

பொதுவாக இன்றைய யுகம் இளைஞர்களின் யுகம் எனலாம். முன்பு வீடு வாங்குவதில் அதிகமாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் ஆர்வம் செலுத்தினர். இப்போது இளைஞர்கள்தான் வீடு வாங்குவதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பொதுவாக இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றுக்கும் இணையத்தையே சார்ந்திருப்பதால் ரியல் எஸ்டேட் தொடர்பான தேடுதலுக்கும் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இணையம் மூலம் வீடு வாங்குவது அதிகரிப்பது இயல்பான விஷயம்தான். கூகுள் ஆய்வில் கூறியிருப்பதுபோல பத்திரிகை வழியான விளம்பரங்களின் மூலம் இப்போது வாடிக்கையாளர் வருவது குறைவாகத்தான் இருக்கிறது. எங்களுக்கான வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் எங்களது நிறுவன இணையதளத்தின் மூலம் வருகிறார்கள் என்கிறார் நவீன் ஹவுஸின் நிறுவனர் குமார்.

மேலும் அவர் இணையதளத்தின் மூலம் வீடு மனை வாங்குவதில் பல நன்மைகள் இருக்கின்றன என்றார். வாங்கப் போகும் வீட்டைக் குறித்த பெரும்பாலான விபரங்களை, அந்த வீடு அமைந்துள்ள இடம், அங்குள்ள விலை நிலவரம், கட்டுமான நிறுவனம் போன்றவற்றைக் குறித்து அறிந்துகொள்ளலாம். நேரில் சென்று இவ்வளவு தகவல்களையும் திரட்டுவதும் கடினம் என்றும் குமார் குறிப்பிடுகிறார்.

நாடு முழுவதும் 15 நகரங்களில் 6 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பதிலளித்தவர்களில் 47 சதவீதமானோர் வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் பகுதி குறித்தும், பட்ஜெட் குறித்தும் அறிய இணையத் தேடலை நாடுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. 23 சதவீதமானோர் மறுவிற்பனை வீடுகளை/ மனைகளைத் தேட இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். 30 சதவீதமானோர் கட்டுமானத்தில் உள்ள வீடுகளைத் தேட இணையத் தேடல் மூலம் கண்டடைகிறார்கள்.

இணையத்தின் மூலம் ரியல் எஸ்டேட் தொடர்பான தகவல்களைப் பெறுவது இப்போது பிரபலமாகி வருகிறது. முன்பு இது சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ போன்ற பெருநகரங்களில் மட்டுமே ரியல் எஸ்டேட் தொடர்பான இணையத் தேடல் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது சிறு நகரங்களில் உள்ள மக்களுக்கு ரியல் எஸ்டேட் தொடர்பான தகவல்களைப் பெற இணையத் தேடலை உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 60 சதவீதமானோர் தாங்கள் வாங்கவிருக்கும் வீடு, வீட்டு மனை தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற இணையத்தை நம்புகிறார்கள். 52 சதவீதமானீர் தாங்கள் வாங்கும் வீடு, வீட்டு மனைகளை மற்ற வீடு/ வீட்டு மனைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து வாங்க இணையத் தேடலைப் பயன்படுத்துகிறார்கள். 49 சதவீதமானோர் வீட்டு உரிமையாளர், அடுக்ககக் கட்டுமான நிறுவனத்தினரைத் தொடர்புகொள்ள இணையத் தேடலைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் ரியல் எஸ்டேட் தொடர்பான வலைப்பக்கங்களையும், இணையக் குழுமங்களையும் பலர் தங்கள் சந்தேகங்களை நிவர்த்திசெய்யப் பயன்படுத்துகிறார்கள் என இந்த ஆய்வறிக்கையை சில புள்ளி விபரங்களைப் பட்டியலிடுகிறது.

வீடு வாங்குபவர்களுக்கு விரும்புவது உறுதியான தகவல்களைத்தான். அதாவது விற்கும் விலை, தளம் குறித்த திட்டம், கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், சட்ட அனுமதிகள், ஏனைய அரசு அனுமதிகள் இவை எல்லாவற்றையும் அவர்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். இவை எல்லாவற்றையும் நேரில் பெறுவதை இணையத்தின் மூலம் பெறுவது எளிது. எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இம்மாதிரியான எல்லாத் தகவல்களையும் எங்கள் இணையத்தின் மூலம் வழங்கிவிடுகிறோம் என்கிறார் இந்தியா ப்ராபர்டீஸ்.காம் முதன்மை அதிகாரி கணேஷ் வாசுதேவன். இவரது நிறுவனம் கடந்த ஒன்பது வருடங்களாக இணையம் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இன்றைக்கு கையடக்க செல்போனில் இருந்தும் துரிதமான இணையத் தேடல் சாத்தியமாகிவிட்டதால் பல முன்னணி நிறுவனங்கள் ‘மொபைல் ஆப்ஸை’யும் வெளியிட்டுள்ளன என்பது இணையத் தேடலின் அதிகரிப்புக்குச் சான்று

பின்னூட்டமொன்றை இடுக